--- --:--:-- --

மின் தடைக்கு சில கருப்பு ஆடுகளும் காரணம் – அமைச்சர் நிர்மல் குமார்

1

மிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்தடை, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனை இருளில் மூழ்கிய அதிர்ச்சி சம்பவமும், ஆங்காங்கே மக்கள் போராட்டங்களும் வெடித்துள்ளன.கத்தரி வெயில் உச்சத்தில் இருக்கும் சூழ்நிலையில், பல இடங்களில் மின்தடை ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நள்ளிரவில் திடீரென 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு அவசர கால ஜெனரேட்டர் வசதி கூட இயக்கப்படாததால், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆக்சிஜன் கருவிகள் முடங்கிய நிலையில், உயிருக்குப் போராடிய நோயாளிகளுக்கு மருத்துவப் பணியாளர்கள் கைகளால் இயக்கும் ‘அம்பு பேக்’ பலூன் மூலம் ஆக்சிஜன் செலுத்திய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் சூழலில், மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பழுதுபார்க்க வந்த மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்து வைத்தனர். பின்னர் காவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டனர்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் தெக்களூர் பகுதிகளில் சூறைக்காற்றால் உடைந்த மின்கம்பங்களைச் சீரமைக்கக் காலதாமதமானதால், 3 நாட்களாக மின்தடை நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் முட்செடிகளையும் மரங்களையும் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், புகார்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ள மின்சார வாரியம், நிலத்தடி மின் கம்பி பழுது, மின்மாற்றி கோளாறுகள் மற்றும் வானிலை மாற்றங்களே மின்தடைக்குக் காரணம் என்றும், தமிழ்நாட்டிற்கு போதிய மின்சாரம் கிடைப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை எனவும், ஊழியர் பற்றாக்குறைதான் இருப்பதாகவும் கூறினார். மின்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளும் இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

 

இந்த பிரச்னைகளை விரைவாக சரி செய்ய அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் நடமாடும் பராமரிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக தற்காலிக களப்பணிக் குழுக்கள் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Right Menu Icon