வானிலை நிலவரம் என்ன..?
2026 – 2027 ஆண்டுகளில் பருவமழை தாமதம், சூப்பர் எல் நினோ தாக்கம், கடுமையான வெப்ப அலை மற்றும் பயிர் விளைச்சல் பாதிப்பு குறித்து கோவை வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிருஷ் வெளியிட்டுள்ள முக்கிய முன்னறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன. 2026 – 2027 ஆண்டுகளுக்கான வானிலை மாற்றங்கள் தீவிரமாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்றும், ஜூன் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் கூடுதல் கவனம் தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போல இந்த முறை பருவமழை விரைவாக தொடங்க வாய்ப்பு குறைவாக இருந்தாலும், ஜூன் தொடக்கம் வரை கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறையலாம். ஆனால் நிலையான மழை நிலை உருவாகும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “சூப்பர் எல் நினோ” உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும், அதன் தாக்கம் பருவமழையின் பிற்பகுதியில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரபிக்கடலில் உருவாகும் Positive IOD நிலை மட்டுமே இந்திய பருவமழைக்கு ஓரளவு ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்றும், தென் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜே.ஓ (MJO) ஆதரவு இல்லாததும், நீண்டகால வறண்ட வானிலை நிலவுவதும் காரணமாக பருவமழை காலத்திலும் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தில் வெப்ப அலை தாக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2027 கோடைக்காலம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பத்தை பதிவு செய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் தங்களின் விவசாய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேங்காய், கரும்பு, மஞ்சள், வெங்காயம், பாக்கு மற்றும் பருப்பு உள்ளிட்ட முக்கிய பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவற்றின் விலை கடுமையாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை குறைந்தால் காவிரி, பவானிசாகர் மற்றும் பி.ஏ.பி அணைகளில் நீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், மழைநீர் சேகரிப்பு முறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டல சமவெளி விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை நம்பியுள்ளதால், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் கிடைக்கும் மழையை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“விவசாயிகளை அச்சப்படுத்துவதற்காக இந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. எதிர்கால வானிலை சுழற்சியை முன்கூட்டியே அறிந்து, விவசாயத்தை சரியான முறையில் திட்டமிட வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்று கோவை வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிருஷ் தெரிவித்துள்ளார்.





