விஜய்க்கு முதல் கோரிக்கை வைத்த அறப்போர் இயக்கம்..!
தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில். அதிக தொகுதிகள் வெற்றி பெற்ற த.வெ.க கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், இவருக்கு அறப்போர் இயக்கம் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள், நேற்று (மே 4) எண்ணப்பட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்பதால், மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி விஜய் காத்துக்கொண்டு இருக்கிறது.
தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், அடுத்து தேவைப்படும் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எங்கிருந்து கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே சமயம், விஜய் ஆட்சி அமைக்கும்போது, அவரது அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில். இவரை மட்டும் அமைச்சர் ஆக்கிவிடாதீர்கள் என்று அறப்போர் இயக்கம் ஒருவரை குறிப்பிட்டு த.வெ.க தலைவர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ பதிவு ஒன்றில், நாங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவர்கள் செய்த ஊழலை எதிர்த்து பேசினோம். அதேபோல் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் அதை சரியாக செய்தோம். அவர்கள் செய்த ஊழலை எடுத்து கூறினோம். ஆனால் பலரும் புதிய கட்சியான த.வெ.க வுக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று எங்களிடம் கேட்கிறார்கள். அறப்போது இயக்கம் தேர்தல் அரசியல் இல்லாத ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
த.வெ.க தேர்தலுக்கு முன்பு மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துள்ளனர். இதை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் முத்திரை இல்லாதவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும். அப்படி பார்த்தால், திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.எஸ்.முருகன் குவாரியில் ஊழலில் சிக்கி, அபராதம் விதிக்கப்பட்டவர். அவரது மனைவி பெயரில் இந்த குவாரி இயங்கி வருகிறது. அவரைப் போன்றவர்களை அமைச்சராக ஆக்க வேண்டாம் என்பதே த.வெ.கவுக்கு அறப்போர் இயக்கம் சார்பில் வைக்கும் கோரிக்கை என்று குறிப்பிட்டுள்ளனர்.





