பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், இளம்பெண்களின் வாழ்க்கையை இரக்கமின்றி சூறையாடிய இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது சாதாரணமாக கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளை கூட கடைப்பிடிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சிக்கியிருக்கும் குற்றவாளிகளை எப்படியாவது தப்பவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் குண்டர் சட்டம் ரத்தானதற்கு அரசு துணை போகியிருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஆட்சியரின் அலட்சியமும், ஆர்வமின்மையும் வழக்கு விசாரணையின் போக்கையே மாற்றும் ஆபத்தாக மாறி உள்ளது என கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இது போன்ற சூழலை அரசு ஏன் திட்டமிட்டு உருவாக்குகிறது, யாரை காப்பாற்ற இந்த முயற்சிகள் நடக்கின்றன என்ற கேள்விகள் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். இளம் பெண்களின் எதிர்காலத்தை சீரழித்த கயவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




