பையனூரில் அம்மா படப்பிடிப்பு தளம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
சென்னையை அடுத்துள்ள பையனூரில் அம்மா படப்பிடிப்பு தளம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள பையனூரில் என்ற இடத்தில் தமிழ் திரைஉலகைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும் படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு 100 ஏக்கர் நிலத்தை வழங்கியது.
அங்கு புதிய படப்பிடிப்பு தளத்தை அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பையனூரில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வீடுகள் அமைக்க 10 ஏக்கர் நிலமும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு 8 ஏக்கர் நிலமும், பெப்சி என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வீடுகள் அமைக்க 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் 15 ஏக்கரில் படப்பிடிப்பு தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூறும் வகையில் அம்மா என்ற பெயரில் புதிய படப்பிடிப்பு தளத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
90 அடி நீளம் மற்றும் 160 அடி அகலம் கொண்ட அம்மா படப்பிடிப்பு தளத்தை தமிழக அரசு 5 கோடி ரூபாய் செலவில் கட்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் ஒப்படைக்க உள்ளது. அம்மா படப்பிடிப்பு தளம் அமைய உள்ள அதே இடத்தில் ஏற்கனவே எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை தமிழக அரசு கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




