பல்லடம் தொகுதியில் செல்வராஜ் பிரசாரம்… திராவிட மாடல் சாதனைகளை விளக்கி பேச்சு!
வாக்கு சேகரிப்பின்போது செல்வராஜுக்கு வரவேற்பு அளித்த மக்கள்.
பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
என்.எஸ்.கே. நகரில் தொடங்கி குன்னாங்கல்பாளையம், சென்னிமலை பாளையம், அக்கணம் பாளையம், பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். இந்தப் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து எஸ்.ஆர் நகர், அய்யம்பாளையம், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் பேசிய செல்வராஜ், தமிழகம் அமைதிப் பூங்காவாகவும், தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும் திகழ்வதற்கு மீண்டும் திமுக ஆட்சி அமைவது அவசியம் என்று வலியுறுத்தினார்.
பல்லடம் தொகுதியின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே தனது முதல் பணி என்று அவர் தெரிவித்தார். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்ததோடு, தங்களின் கோரிக்கைகளை மனுக்களாகவும் அவரிடம் வழங்கினர். தமிழகத்தின் வளர்ச்சிப் பாதை தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.






