திருவாடானை தாசில்தார் ஆண்டியின் ஊழல் சாம்ராஜ்யம்! தலையாரி ரகசியக் கூட்டு: தாலுகா அலுவலகத்தை மூழ்கடிக்கும் லஞ்ச பேரங்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், இயற்க்கையின் வறட்சியாலும், வானம் பார்த்த பூமியாகவும் அறியப்பட்ட இந்த பகுதி, இன்று ஒரு சில ஊழல் அதிகாரிகளின் சுயநலப் பசிக்கு பலியாகி வருகிறது. திருவாடானை தாசில்தார் ஆண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்தி வரும் சவுட்டு மண்ணு (மணல்) கொள்ளை எல்லை மீறிச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தூய்மையான, லஞ்சமற்ற ஆட்சியை வழங்குவதாகக் கூறும் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்த அதிகாரியின் அராஜகங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் ஆண்டி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடுகளின் உச்சத்தை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது .
தாசில்தாரின் (கைத்தடி ) தலையாரி விஸ்வநாதன்;
வட்டாட்சியரின் அனைத்து முறைகேடுகளுக்கும் மூளையாகவும், வலது கரமாகவும் செயல்படுபவர் வட்டானம் கிராமத்தின் தலையாரியான விஸ்வநாதன். இவரே வட்டாட்சியரின் காரை ஓட்டும் டிரைவராகவும், அவர் சொல்லும் இடத்திற்கு லஞ்சப் பணத்தை வசூலிக்கும் வசூல் ராஜாவாகவும் வலம் வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஆா்.ஐ. ரூமில் மது விருந்துகள்?
அலுவலகப் பணிகள் முடிந்ததும், தொண்டியில் உள்ள ஆா்.ஐ. ரூமில்தான் இவர்களது திட்டமிடல் மையமாக செயல்படுகிறது. அங்கு வட்டாட்சியருக்கு தேவையான மது வகைகளை வாங்கித் தந்து, எந்தெந்த இடங்களில் யார் யாரிடம் பணம் பெறப்பட்டுள்ளது, யாருக்கு மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது குறித்த ரகசிய ஆலோசனைகள் அங்குதான் அரங்கேறுகின்றன.
பலியாகும் அப்பாவி ஊழியர்கள்;
வட்டாட்சியரின் முறைகேடுகளைக் கேள்வி கேட்காமல், தங்களுக்குச் சாதகமாகச் செயல்படாத எளிய கிராம உதவியாளர்களை (Village Assistants) பலிகடா ஆக்குவதிலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு அப்பாவி கிராம உதவியாளர் மணக்குடி தென்னவன் அவசரகதியில் பழிவாங்கும் நோக்கில் சஸ்பென்ட் செய்துள்ளதும் இவர்களது சர்வாதிகாரப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஏழை விவசாயிகளின் வயிற்றில்டிக்கும் சவுட்டு மண் கொள்ளை!
ராமநாதபுரம் போன்ற வறண்ட மாவட்டங்களில், எளிய மக்கள் ஒரு சிறிய வீடு கட்டவோ அல்லது தங்குமிடம் அமைக்கவோ சவுட்டு மண்ணை நம்பியே உள்ளனர். ஆனால், அங்கும் லாபம் பார்க்கும் கீழ்த்தரமான செயலில் இந்த வட்டாட்சியர் ஈடுபட்டுள்ளார்.
மழை காலங்களில் இயல்பாகவே மண் அள்ளும் பணிகள் தடைபடும். ஆனால், மழை பெய்து மண் அள்ள முடியாத சூழல் ஏற்பட்டால், பொதுமக்கள் மீண்டும் புதிதாக பணம் கட்டினால்தான் அடுத்த நாள் மண் அள்ள அனுமதியளிக்கப்படும் என்ற கோரமான விதிமுறையை இவர்கள் திணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
பணத்தை மீட்கும் கொடுமை?
வட்டாட்சியருக்கும் அவரது உதவியாளர்களான தலையாரிகள் விஸ்வநாதன், பழயானகோட்டை கார்த்திக் மற்றும் பலருக்கு லஞ்சம் கொடுக்க, டிராக்டர் உரிமையாளர் குறைந்தபட்சம் 200 டிராக்டர் மண் அள்ளினால் மட்டுமே தான் முதலீடு செய்த லஞ்சப் பணத்தை மீட்டெடுக்க முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையையும் ஏழை விவசாயிகள்தான் சுமக்க வேண்டியுள்ளது என மனக்குமுறலை கொட்டி தீர்க்கின்றனர் மல்லனூர் மக்கள்.
நடவடிக்கை பாயுமா?
“மஞ்சத்தில் லஞ்சம்” வாங்கும் போக்கை ஏற்கும் வகையில், திருவாடானை வட்டாட்சியர் ஆண்டி தனது பதவியை ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார். இத்தகைய ஊழல் அதிகாரிகள் தொடர்ந்தால், அரசாங்கத்தின் நல்ல பெயருக்குத்தான் களங்கம் ஏற்படும்.
எனவே, ஊழலை அறவே எதிர்க்கும் இந்தத் தமிழக அரசும், ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பொறுப்பு அமைச்சரும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். வட்டாட்சியர் ஆண்டி மற்றும் அவருக்குத் துணையாகச் செயல்படும் தலையாரி விஸ்வநாதன் உள்ளிட்டோர் மீது உரிய தீவிர விசாரணை நடத்தி, தற்காலிக இடமாற்றம் அல்லாமல் கடுமையான துறை ரீதியான மற்றும் சட்டப்பூர்வமான உடனடி நடவடிக்கை பாய வேண்டும் என்பதே திருவாடானை பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவும், தவிப்பாகவும் உள்ளது.
லஞ்சம் வாங்குவது கிடையாது!
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தாசில்தார் ஆண்டியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டபோது, “மல்லனூர் பகுதியில் வயக்காட்டில் தண்ணீர் தேங்கி நின்றதால், அங்கு மண் எடுத்து நிரப்பப்பட்டது; அதை நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். நான் யாரிடமும் பணம் அல்லது லஞ்சம் வாங்குவது கிடையாது. வேண்டுமென்றே சிலர் என் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள். நீங்கள் பத்திரிகையாளர் என்பதால் உண்மையை விசாரித்து செய்தி வெளியிடுங்கள், நான் எங்கு யாரிடமும் பணம் பேசவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
திருவாடானை தாலுகா அலுவலகம் குறித்த மற்றொரு புதிய தகவல் தற்போது நமது கைகளுக்கு வந்துள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களையும், அடுத்தடுத்த அதிரடி உண்மைகளையும் நமது பிரத்யேக பாணியில் அடுத்த செய்தியில் விரிவாகப் பார்ப்போம்!







