--- --:--:-- --

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் அலுவலகத்தில் ஐடி ரெய்டு..!

10

ந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரில் சாலை கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களான நரசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல் அலுவலகப் பணிகள் தொடங்கிய நிலையில், எதிர்பாராத விதமாக வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவாக அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

 

மிகத் தீவிரமான பாதுகாப்புடன் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் துணையாக மத்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி ஏந்தியபடி அலுவலகத்தின் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தற்போது தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால், தேர்தல் பறக்கும் படையினரும் இந்த அதிரடி சோதனையில் இணைந்துகொண்டு ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.

 

தேர்தல் நெருங்கி வரும் இக்கட்டான சூழலில், ஆளுங்கட்சியின் மிக முக்கிய அமைச்சராக வலம் வரும் சேகர்பாபுவின் மகன்கள் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மயிலாப்பூர் அலுவலகத்தில் உள்ள கணினி பதிவுகள், வரவு-செலவு ஆவணங்கள் மற்றும் டெண்டர் தொடர்பான கோப்புகளை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாகச் சோதித்து வருகின்றனர்.

 

ஏதோ ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சோதனையின் முடிவில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் அல்லது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அந்தப் பகுதியில் குவியத் தொடங்கியுள்ளனர்

Leave a Reply

Right Menu Icon