வருமானத்தை மறைத்ததாக அபராதம் விதித்த வழக்கு.. மேல்முறையீடு செய்தார் தவெக விஜய்!
வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்த விவகாரத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் மேல்முறையீடு செய்திருக்கிறார். கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ’புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்தது. மேலும் வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும் எனவும், ஆனால் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் வருமான வரிச்சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதித்தது சரிதான் என வருமான வரித்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி, “நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை” எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
அப்போது, வருமான வரித்துறையில் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, அபராத உத்தரவை எதிர்த்து, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதியளித்த நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மேல் முறையீடு செய்யக் கூடாது. மற்ற காரணங்களை கூறி மேல் முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டார்.





