பல்லடம் திமுக வேட்பாளர் செல்வராஜிக்கு கிராமங்கள் தோறும் எழுச்சிமிகு வரவேற்பு!
பல்லடம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார் திமுக வேட்பாளர் செல்வராஜ்
பல்லடம்: சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., தொகுதிக்குட்பட்ட வடக்குப் பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு!
வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கிய ஊராட்சிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நடு வேலம்பாளையத்தில் தொடங்கிய இந்தப் பிரச்சாரப் பயணம், ஊஞ்சபாளையம், வேலம்பாளையம், மூணு மடை மற்றும் அருவெளி நகர் ஆகிய பகுதிகள் வழியாகத் தொடர்ந்தது.

அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பெண்கள், வேட்பாளர் செல்வராஜிற்கு ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஆறுமுத்தாம்பாளையம் மற்றும் கரைப்புதூர் பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.
லட்சுமி நகர், உப்பிலிபாளையம், சேகாம்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு மக்களிடையே உரையாற்றிய செல்வராஜ் எம்.எல்.ஏ., கடந்த காலங்களில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளைச் சுட்டிக்காட்டினார். மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதிகள் மற்றும் தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்த அவர், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை மீண்டும் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
பல்லடத்தை முன்மாதிரி ஆக்குவேன்!
பூமலூர் பகுதியில் பிரச்சாரம் நிறைவுற்றபோது, பொதுமக்கள் அளித்த எழுச்சியானது தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்வது போல் அமைந்திருந்தது. இந்தப் பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு கட்சிப் பாடல்களைப் பாடியும், கோஷங்களை எழுப்பியும் தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்தனர். கிராமப்புறங்களில் நிலவும் இந்த அமோக வரவேற்பு, மற்ற வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
“மக்களின் தேவைகளை அறிந்தவன் நான். பல்லடம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியம்” என உருக்கமாகப் பேசிய செல்வராஜ், முதியவர்களிடம் ஆசி பெற்றுத் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.





