கலைஞர் ஒரு சிங்கம்.. அவரை யாராலும் சிறை வைக்க முடியாது – ஈபிஎஸ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
கலைஞர் ஒரு சிங்கம் என்றும், அவரை யாராலும் சிறை வைக்க முடியாது, அவரது இதய சிறையில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த ஈபிஎஸின் விமர்சனத்திற்கு பதில் அளித்தார்.
கருணாநிதியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வீட்டின் படியேறி வந்து கும்பிட்டுக் கேட்ட தனக்கு மறுப்பு தெரிவித்த இரக்கமற்றவர் ஈபிஎஸ் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில், கருணாநிதி குறித்து பேச எந்த தகுதியும் ஈபிஎஸுக்கு கிடையாது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது எனவும் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், “ தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்! பண்பற்ற பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல! எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்! மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.





