--- --:--:-- --

தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க மூத்த நிர்வாகிகள் – சரமாரி குற்றச்சாட்டு

9

மிழக அரசியலில் பரபரப்பான சூழலில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன் மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் இணைந்தனர்.

 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க-வின் முன்னாள் மூத்த நிர்வாகி (பார்த்திபனின் தந்தை) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன் உள்ளிட்டோர் தெரிவித்ததாவது: “அம்மா காலத்தில் எம்பியாகவும், பல்வேறு வாரியங்களின் தலைவராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவன் நான். தற்போது அ.ம.மு.க-வில் தமிழக வளர்ச்சிக்கோ அல்லது தமிழின் வளர்ச்சிக்கோ எந்த ஒரு கொள்கை திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசுக்கு அடிமைப்படாமல், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஒரே இயக்கமாகத் தி.மு.க இருப்பதால், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எங்களை இணைத்துக் கொண்டோம்” என்றார்.

 

 

வேட்பாளர் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், “அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஊடகங்களுக்குக் கூறும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. நான் வேட்பாளர் வாய்ப்பை மறுத்ததாக அவர் கூறுவதில் உண்மையில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது நான் காட்டிய விசுவாசத்திற்கு இன்று அங்கீகாரம் கிடைக்கவில்லை.

 

 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் நானும் ஒருவன். கூவத்தூரில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் தினகரனை நம்பி வந்தேன். ஏன் எங்களைப் புறக்கணித்தார்கள் என்று எங்களுக்கே புரியவில்லை. 1984-லேயே நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டதாக ஆங்கில நாளிதழ்கள் பாராட்டின. அப்போதே எனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. 98-ல் பாராளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றினேன். ஆனால், இப்போதும் எனது மகன் எட்டரை ஆண்டுகள் தியாக மனப்பான்மையோடு உழைத்தும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்கான காரணத்தை நீங்கள் தினகரனிடம் தான் கேட்க வேண்டும்.

 

 

எட்டரை ஆண்டுகள் மாவட்ட செயலாளராகப் பணியாற்றி, பொருளாதார ரீதியாகவும் பல இழப்புகளைச் சந்தித்தேன். மீண்டும் எம்.எல்.ஏ ஆக்குவேன் என்று அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை. டி.டி.வி தினகரனை நம்பி இன்னும் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னைப் போன்ற நிலைதான் வரும். இது மிகவும் தாமதமான முடிவு என்றாலும், சரியான முடிவு.

 

 

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்து, முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடும் தலைவரின் கைகளை வலுப்படுத்துவோம்” என்றார்.தேர்தல் நெருங்கும் வேளையில், அ.ம.மு.க-வின் கோட்டையாகக் கருதப்பட்ட மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி தி.மு.க-வில் இணைந்திருப்பது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon