ரூ. 50 லட்சத்துடன் சிக்கிய த.வெ.க வேட்பாளர் உறவினர்..!
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால்குடி தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளலும், அதிமுக சார்பில் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த லீமாரோஸும், நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜனும் களமிறங்கியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளர் கு.ப. கிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், லால்குடி வட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு ஒரு முக்கிய ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்படி, லால்குடி தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரது வீட்டில் பெருமளவில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் அங்கு முதற்கட்ட சோதனையை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக வருமான வரித்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விரிவான சோதனையில் மொத்தம் 50 லட்ச ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அரவிந்த் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த 50 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்து, அதன் பின்னணி குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பிடிபட்ட அரவிந்த், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. “மற்ற கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் வாக்கை நேர்மையாகச் செலுத்துங்கள்” என்று தவெக தலைவர் விஜய் பேசி வரும் நிலையில், அவரது கட்சி வேட்பாளரின் உறவினர் வீட்டிலேயே இவ்வளவு பெரிய தொகை சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
மேலும், கு.ப. கிருஷ்ணன் முன்னதாக அதிமுக அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரின் கீழ் அதிகாரிகள் சோதனை செய்தபோது, பணத்தை மூட்டையாகக் கட்டி ஆற்றில் வீசியதாக எழுந்த பழைய சர்ச்சைகளும் தற்போது மீண்டும் பொதுவெளியில் பேசப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த விவகாரம் லால்குடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





