பணிக்கு திரும்பாவிட்டால் வேலை பறிபோகும் : அரசு மருத்துவர்களுக்கு விஜயபாஸ்கர் எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது பணியிடம் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
அரசின் வேண்டுகோளை ஏற்று 1500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் என்றும், பணிக்குத் திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மருத்துவமனை வாயிலை மறித்து கோஷம் இடுவது சரியா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் மருத்துவமனை என்பது போராட்ட களம் அல்ல என்றும் கூறியுள்ளார். தற்போது மூன்றாயிரத்து 127 மருத்துவர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





