--- --:--:-- --

தென் தமிழ்நாட்டில் அதிமுக டெபாசிட் கூட பெறாது -கிருஷ்ணசாமி

2

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இ.பி.எஸ் கூட்டணி அமைத்தது போல தெரியவில்லை. தன்னைச் சுற்றியுள்ள 40-45 பேர் வெற்றி பெற்றால் போதும் என மட்டுமே நினைப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

 

அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு எட்டப்படாத‌தால் தனித்து போட்டி என புதிய தமிழகம் கட்சி அறிவித்தது. இந்நிலையில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், நாளை மறுநாள் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்க இருக்கிறோம். கடந்த இரண்டு நாட்கள் புதிய தமிழகம் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நேர்காணல் நடைபெற்றது. 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நல்ல முறையில் செயல்படுகிறது. வெற்றி வாய்ப்பு உள்ள 60-70 தொகுதிகளை குறி வைத்து பணி செய்து வருகிறோம்.

ஒரு பிரதான கட்சியாக 63 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கக்கூடிய அதிமுக ஒரு போராட்டம்கூட நடத்தவில்லை. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சட்டப் போராட்டம் உள்ளிட்ட நாங்கள் பல தொடர் போராட்டத்தை முன்னெடுத்தோம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும், தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும், ஒரு கூட்டணி ஆட்சி மலர்ந்தால் அனைத்து தரப்புகளுக்கும் நல்லது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடன் இணைந்து போட்டியிட்டோம்.

 

தொடர்ச்சியாக 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சி எடுத்தோம். பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட 9 இடங்களில் டெபாசிட் இழந்தது. புதிய தமிழகம் கட்சிக்கான உரிய மதிப்பை, மரியாதையை, கவுரவத்தை அளிக்க தயாராக இல்லை. தன்னிச்சையாக, அமித்ஷா எப்படி ஆனாலும் தன்னை முதல்வராக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் எடப்பாடி இருக்கிறார்.

தென் தமிழ்நாட்டில் உள்ள 50-60 தொகுதிகளில் டெபாசிட் கூட பெற முடியாத அளவுக்கு அதிமுக தற்போது பலவீனமாக உள்ளது. எங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக தலைமை தரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர் “தன்னை ஆளாக்கிய சசிகலா, பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைவரையும் புறக்கணித்திருக்கிறார். பாஜகவிற்கு வெற்றி பெற முடியாத 27 சீட் கொடுத்துள்ளார். தான் மட்டும் எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்று, அமித்ஷா எப்படியாவது எடப்பாடியை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைப்பார் என அனைவரையும் புறந்தள்ளுகிறார். அதற்கான விலையை அவர் அனுபவிக்க வேண்டி இருக்கும்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.

”தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் கூட்டணி வைத்தது போல் தெரியவில்லை. தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய 40-45 பேர் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் தான் அவர் இருக்கிறார். அதிமுக கூட்டணியிலிருந்து புதிய தமிழகம் வெகு தூரம் விலகி வந்துவிட்டது.” என்றும் அவர் விளக்கமளித்தார்.

 

த.வெ.க உடன் கூட்டணி வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அவர்கள் முன்னெடுத்தால், அதுபற்றி சிந்திப்போம், அவர்களிடமிருந்து முயற்சி வந்தால் அதைப்பற்றி பரிசீலிப்போம் என கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைத்த ஓட்டு, மோடியை பிரதமராக்குவதற்காக கிடைத்த ஓட்டு தானே தவிர, அது எடப்பாடிக்கு வராது. 10-12 தொகுதிகளை குறி வைத்துள்ளோம், அந்த தொகுதிகளில் தனித்தே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 

மக்கள் எங்களை ஆதரிப்பார்கள்.” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கும் கிருஷ்ணசாமி மறுப்பு தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி மிக வலுவற்ற கூட்டணி. நாங்கள் 70-85 ஆயிரம் வாக்கு உள்ள தொகுதிகள் பல உள்ளன. பாஜக அமித்ஷாவை சந்திக்க வந்த எண்ணமும் இல்லை. மீண்டும் பின்னோக்கி பயணிக்க தயாராக இல்லை. 60-70 தொகுதிகள் கண்டறிந்துள்ளோம். நாளை உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Right Menu Icon