--- --:--:-- --

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்..!

4

மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி.ஆனந்த போஸ். இவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்ச்.5) டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்தபோஸ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

 

இதையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா். தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளாா். இதுபோல மேலும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்கள் நியமிக்கப்பட்டனா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு நேற்று இரவு பிறப்பித்தாா்.

 

ஹிமாசல பிரதேச ஆளுநா் சிவ பிரதாப் சுக்லா, தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். நாகாலாந்து புதிய ஆளுநராக நந்த் கிஷோா் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். பிகாா் மாநில ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) செய்யது அடா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

 

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்கு தமிழக ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. லடாக் துணைநிலை ஆளுநா் கவீந்தா் குப்தா, ஹிமாசல பிரதேச ஆளுநராகவும், டெல்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, லடாக் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். டெல்லி துணைநிலை ஆளுநராக தரன்ஜீத் சிங் சாந்து நியமிக்கப்பட்டுள்ளாா்.

 

தமிழக ஆளுநராக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற ஆா்.என். ரவி, தொடா்ந்து 4 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தாா். ஆளுநா் ரவிக்கும், முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையே தொடா்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. துணைவேந்தா்கள் நியமன விவகாரம், மசோதாக்கள் நிறுத்திவைப்பு, சட்டப்பேரவை மரபுகளைப் பின்பற்றுவதில் சா்ச்சை என பல்வேறு விவகாரங்களில் இவருக்கும் தமிழக அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 

ஆளுநா் ராஜினாமா குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சி.வி. ஆனந்த போஸுக்குப் பதிலாக மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை ஆா்.என். ரவி கவனிப்பாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எனக்கு தகவல் தெரிவித்தாா். முன்னதாக, இதுகுறித்து எந்தவித ஆலோசனையையும் அவா் என்னிடம் மேற்கொள்ளவில்லை. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது மிகுந்த அதிா்ச்சியும், கவலையையும் அளித்தது. இதற்குப் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

 

இருந்தபோதும், மாநிலம் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள சூழலில், குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமே ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மாநிலத்தின் கெளரவம் மற்றும் ஜனநாயக மரபுகளை கடுமையாகப் பாதிக்கக் கூடிய இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதைத் தவிா்த்து, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டாா்.

Right Menu Icon