5 நபர்கள் தீபம் ஏற்ற கலெக்டர் அனுமதிப்பாரா?
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
விசாரணையின் போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் ஒரு முக்கிய கேள்வியை முன்வைத்தார். அதில், “நான் 15 நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி, 5 நபர்கள் மட்டும் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுமா? என்பதை கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தற்போது நிலுவையில் உள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பொது மன்னிப்பு கோரினார். சூழல் கருதியே முடிவு எடுக்கப்பட்டதாகவும் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் தெரிவித்தார். அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று ஆட்சியர் கூறினார். கோவில் சொத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சொத்து அல்ல என நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.
“நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சி சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்; அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்” எனக் கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார். நாளை மறுதினம் மாவட்ட ஆட்சியர் ஆஜராகத் தேவையில்லை எனவும் மாநகரக் காவல் ஆணையர் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.





