கையால் எழுதப்படும் கோப்புகளுக்குத் தடை..!
தமிழகத்தில் பட்டா மாறுதல் நடைமுறைகளை இன்னும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் நோக்கில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் பட்டா மாறுதல் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே கையாள வேண்டும் என்றும், கையால் எழுதப்படும் ‘மேனுவல்’ கோப்புகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நில அளவைப் பிரிவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறைகளான கையால் எழுதப்பட்ட குறிப்புக் கோப்புகள் (Manual Note Files), கையால் வரையப்படும் வரைபடங்கள் மற்றும் வட்டாட்சியர்களால் மேனுவலாக அங்கீகரிக்கப்படும் உட்பிரிவு அறிக்கைகள் ஆகியவற்றை இனி பயன்படுத்தக் கூடாது என இந்தச் சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.
அதற்குப் பதிலாக, கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய அனைத்து வகை நிலங்களுக்கான பட்டா மாறுதல் விண்ணப்பங்களையும் மின்னணு முறையிலேயே அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், ‘கொலாப்லேண்ட்’ மற்றும் ‘தமிழ் நிலம்’ ஆகிய மென்பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் இந்தப் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தற்போது ஒரு தாலுகாவில் சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் இது முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த புதிய டிஜிட்டல் முறைப்படி, நில உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் தங்களது ஆன்லைன் லாகின் மூலமாகவே சரிபார்த்து முடிப்பார்கள். நிலத்தை உட்பிரிவு செய்ய வேண்டிய விண்ணப்பங்களாக இருந்தால், குறுவட்ட அளவையர் புல ஆய்வு செய்து, மின்னணு வரைபடத்தை உருவாக்கி வட்டாட்சியரின் ஒப்புதலுக்கு ஆன்லைனிலேயே சமர்ப்பிப்பார்.
இதன் மூலம் பொதுமக்கள் பட்டா மாறுதலுக்காக அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்கும் நிலையும், கோப்புகள் தேக்கமடைவதும் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2015-ம் ஆண்டிலேயே இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இது முழுமையான டிஜிட்டல் வடிவத்தைப் பெற்றுள்ளது. அதிகாரிகள் இனி மேனுவல் கோப்புகளைத் தயாரிப்பதைக் கைவிட்டு, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக லாகின் ஐடி மூலமாக மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.






