டெல்லியில் கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
77ஆவது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் 77 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்காக சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கடமைப் பாதைக்கு வந்தனர்.
சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர். குடியரசுத் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டன. மேலும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.






