சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பஸ் சேவை..!
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க சுற்றுலாத்துறை முடிவு செய்தது.
அதன்படி, அயலகத் தமிழர்களின் நிதிப் பங்களிப்புடன், முதல்கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட டபுள் டக்கர் மின்சாரப் பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து சுற்றுலாத்துறை வாங்கியது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்த பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். டபுள் டக்கர் பேருந்தில் ஏறியும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்தில் மொத்தம் 65 பேர் பயணிக்க முடியும். சுற்றுலாப் பயணிகள் நகரத்தின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் பேருந்தின் பக்கவாட்டில் அகலமான ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.





