தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தை பராசக்தி திரையில் காட்டியிருக்கிறது – அண்ணாமலை
பராசக்தி திரைப்படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்குச் செய்த துரோகத்தையும், அந்தத் தரப்பு செய்த அடாவடித்தனங்களையும் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ‘பராசக்தி’ திரைப்படம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “பராசக்தி திரைப்படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்குச் செய்த துரோகத்தையும், அந்தத் தரப்பு செய்த அடாவடித்தனங்களையும் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. தமிழர்களுக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இழைத்த அநீதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.
“ஈழப் படுகொலைக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸைத் துரத்தியடித்தது போல, இனி காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளையும் மக்கள் வீழ்த்துவார்கள். இந்தப் படம் திமுக-விற்கு ‘முரசொலி’ போல அமைந்து அவர்களை வீழ்த்தும்,” என்று குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களின் விமர்சனம் மற்றும் மிரட்டல்கள் குறித்துக் கேள்விக்கு பதிலளித்த பேசிய அண்ணாமலை, “”ஆதித்ய தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாம் யார்? அவர்கள் அங்கிருந்து கொண்டு என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு சாதாரண விவசாயியின் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
மேடை போட்டு என்னைத் திட்டும் அளவுக்கு நான் உயர்ந்துவிட்டேனா என்று தெரியவில்லை.” என்று தெரிவித்த அவர்,”மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவேன் என்று எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு நிச்சயம் வருவேன், முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் பயந்திருந்தால் நான் என் கிராமத்திலேயே இருந்திருப்பேன்,” என்று சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “காமராஜரை இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று சொன்னால், அவர் தமிழர் இல்லை என்று ஆகிவிடுமா? அதேபோல்தான் மும்பையை உலகத்தின் தலைநகரம் என்று சொன்னால், அது மராட்டியர்களால் கட்டப்பட்ட நகரம் இல்லை என்று ஆகிவிடாது. மும்பை நகரம் மராட்டிய சகோதர சகோதரிகளால் உயர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பேசுபவர்கள் அறிவில்லாதவர்கள்,” என்று சாடினார்.





