--- --:--:-- --

2 நாட்களில் கூட்டணியை அறிவிப்பேன் – ராமதாஸ்

10

பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதஸுக்கும் அவருடைய மகனுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால், இருவரும் தனித் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 2026 சட்டமன்றத் தேரதலில் அ.தி.மு.க உடன் பா.ம.க கூட்டணியை உறுதி செய்தார். அ.தி.மு.க அன்புமணியுடன் கூட்டணி பேசியதற்கு, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அ.தி.மு.க அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.

 

மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தனக்குமட்டும்தான் அதிகாரம் உள்ளது என்று கூறினார். இந்நிலையில், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: “பா.ம.க-வைப் பொறுத்தவரை நான் ஆரம்பித்தக் கட்சி, தனி ஒரு மனிதன் ஆரம்பித்த கட்சி. இதற்கு உரிமை கொண்டாட யாரும் இல்லை.

 

உரிமை கொன்டாட யாருக்கும் தகுதி இல்லை. உரிமை கொண்டாடவும் முடியாது. இந்த கட்சியை நான் வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, ஊண் உரக்கம் இல்லாமல், இரவு பகலாக பாடுபட்டு ஓடி ஓடி உழைத்து வளர்த்தேன். நான் செய்த சத்தியத்தை மீறி ஒருவரை (அன்புமணி) மத்திய அமைச்சராக்கினேன். ஆனால், அவர் எனக்கே வேட்டு வைப்பார் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

 

ஆனாலும், இன்றைக்கு அவர் செய்த தில்லுமுல்லுகளை எல்லாம கணித்த பிறகு, கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு பொதுக்குழு, கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாம் கூடி இனி அவரை அந்த கட்சியில் வைத்திருக்கக்கூடாது என்ற நிலையில், அவரைக் கட்சியில் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கினோம்.

 

நீக்கிய பிறகும், நீக்குவதற்கு முன்னாலும் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவது, என்னோடு இருப்பவர்களை மனம் நோகும்படி விமர்சனம் செய்வது. ஒரு கோஷ்டியை வைத்துக்கொன்டு தமிழ்நாட்டு அரசியலிலே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறார்.

 

கட்சியின் தலைமைப் பதவி கொடுத்தேன், ஆனால், கட்சியை என்னிடம் இருந்து பறிப்பதற்கு, செயல்திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்பட்டு வருவதை பொதுமக்கள் அறிவார்கள். தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தவாறும், நீதிமன்றத் தீர்ப்பின்படியும் அன்புமணி பா.ம.க-வில் இல்லை.

 

பா.ம.க தனி ஒரு மனிதனால், ராமதாஸால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அப்படி இருக்கும்போது, அதனுடைய தலைமைப் பதவியை நானே எடுத்துக்கொள்கிறேன். இப்போது அதன் தலைமைப் பதவியை நானே எடுத்துக்கொண்டேன். நிறுவனர், தலைவராக உள்ளேன்.

 

அன்புமணியின் செயல்பாட்டால், அவருக்கு கொஞ்சம்கூட தலைமைப் பண்பு கொஞ்சம்கூட இல்லை என்பதால் அதை செய்ய வேண்டியதாயிற்று. கட்சி, என்னிடம்தான் உள்ளது என்று சொல்வதற்கு, நடந்த நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு சான்று.” என்று கூறினார்.

 

மேலும், “அன்புமணி பா.ம.க சார்பில் கூட்டணி பேசுவது நேற்று நடந்த கூத்து. அவர் கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. இது உங்களுக்கு எம்லாம் தெரியும்.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ், “ நான் அமைக்கிற கூட்டணிதான், நான் இருக்கும் கூட்டணிதான், நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். அதனால், நேற்று நடந்தது ஒரு கூத்து, நாடகம்.” என்று விமர்சனம் செய்தார்.

 

மேலும், “இந்த நாடகத்தை தமிழக மக்கள் பார்த்து, ஏன் இப்படி இந்த பிள்ளை வயதான தந்தைக்கு எதிராக இப்படி செய்கிறார். எவ்வளவு பாடுபட்டு அவரை படிக்க வைத்தார், அமைச்சராக்கினார். ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுத்தார். கட்சியின் தலைமை பொறுப்பையும் கொடுத்தார்.

 

ஆனால் தந்தைக்கு எதிராக இவ்வளவு கேவலமாக இந்த பிள்ளை நடந்து கொள்கிறார்? தந்தை இருக்கும் வரை ராமதாஸ் தலைமை தாங்கி இருக்கலாமா? அதை தான் ராமதாஸ் செய்து இருக்கிறார். இவர் செய்வது அடாவடி, இப்படி யாரும் செய்ய முடியாது என்று மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது.

 

இதை என்னிடமும் வந்து சொல்கிறார்கள், என்னிடம் இருந்து கட்சியை பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்படுவதை மக்கள் அறிவார்கள். யாருடன் கூட்டணி என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிப்பேன்” என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Right Menu Icon