--- --:--:-- --

விஜயின் ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் கோரி வழக்கு..!

5

யக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த மாதம் படத்தை தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது.

 

தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.

 

ஜனநாயகனுக்கான திரையரங்கு விநியோகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்க, டிக்கெட்டுகளை பெறுவதற்கு விஜய் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இப்படியான சூழலில் தணிக்கை சான்று கிடைக்கவில்லை. இதனிடையே கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ஜனநாயகனை தடுப்பது யார் என்று உங்களுக்கே தெரியும் எனக் கூறினார்.

 

ஜனநாயகனுக்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுவதாக தோன்றுவதாக தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்தார். இதனிடையே மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பராசக்தி படத்திற்கு ஒரு நீதி? ஜனநாயகன் படத்திற்கு ஒரு நீதியா? என தவெக தரப்பில் இருந்து சிலர் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

படம் வெளியாக 3 நாட்களே இருக்கும் நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கே.வி.என் நிறுவன தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பிடி ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தில் அதிக வன்முறை இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறி, மீண்டும் மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவிலை என்றால், படக்குழுவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் கோரிய வழக்கை நாளை (ஜன.7) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Right Menu Icon