திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது என்றும் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் சிலர் சேர்ந்து தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான உத்தரவை இன்று கொடுத்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசும், இந்து அறநிலையத்துறையும் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. ஒரு விவகாரத்தில் அனுமதி கொடுப்பதாக இருந்தால், கடந்த கால ஆதாரங்களின் அடிப்படையிலேயே அனுமதி வழங்கியிருக்க வேண்டும்.
காமராஜர், ராஜாஜி, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்த முதல்வரின் ஆட்சி காலத்திலும் அங்கு தீபம் ஏற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழவில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. ஆனால், அதனை அனுமதிக்க மாட்டோம் என்று அவர் சொன்னார்” எனத் தெரிவித்துள்ளார்.





