மேயருக்கு எதிராக வீசிய அம்பு! *குப்பை விவகாரத்தில் செல்வராஜின் சாதுர்யம்* மக்களுடன் கைகோர்த்ததால் மேயருக்கு சங்கடம்!
திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினை, திமுக மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், மேயருக்கு எதிராக சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளார், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ். குப்பை அள்ள வேண்டுமென்று மக்களுடன் மக்களாக தர்ணாவில் ஈடுபட்டார். இதன்மூலம் மக்கள் ஆதரவு மற்றும் மேயருக்கு எதிராக அரசியல் அம்பு என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளார் செல்வராஜ்.
திருப்பூர் என்றாலே பனியன் வாடை அடிக்கும் காலம் போய், இப்போது குப்பை வாடை தான் பிரதானமாக இருக்கிறது. ஆனால், அந்த குப்பை நாற்றத்தையும் தாண்டி, தற்போது அங்கே பலமான அரசியல் ‘புகைச்சல்’ கிளம்பியிருக்கிறது. ஆளுங்கட்சிக்குள்ளேயே ஒரு ‘உளகுத்து போர்’ வெடித்திருப்பது தான் இப்போது மெகா ஹாட் டாபிக்.
ஒரு பக்கம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மறுபக்கம் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ-வும், தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளருமான செல்வராஜ். இவர்களுக்கு இடையிலான பனிப்போர், இப்போது குப்பை விவகாரம் மூலம் நடுத்தெருவுக்கு வந்து நாறிக் கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை மேலாண்மை என்பது பல மாதங்களாகவே எட்டாக்கனியாக இருக்கிறது. பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க, நகரமே ஒரு குப்பைத் தொட்டியாக மாறியிருக்கிறது. பாஜக இதை திமுகவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி பெரும் போராட்டத்தை நடத்தியது. அண்ணாமலையே வந்து தலைமையேற்று போராட்டத்தில் கைதானதால், தமிழக அளவில் திருப்பூர் குப்பை பிரச்சினை கவனம் பெற்றது.

இந்தச் சூழலில் தான், மேயர் தினேஷ்குமாருக்கு செக் வைக்கும் விதமாக ஒரு ‘மாஸ்டர் பிளான்’ போட்டார் எம்.எல்.ஏ செல்வராஜ். அதுவும் எப்படி? எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை, ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே கையில் எடுத்து தர்ணாவில் குதித்தது தான் திருப்பூர் உடன்பிறப்புகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வெள்ளியங்காடு, முத்தையன் கோவில் எனச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மாதங்களாகக் குப்பை மலைபோலக் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் குடலைப் பிடுங்க, மக்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். இந்தச் சமயம் பார்த்து, தனது ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கினார் தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ்; குப்பை அகற்றக்கோரி, தர்ணாவில் ஈடுபட்டார்.
ஆளுங்கட்சி மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே போராட்டம் என்று திருப்பூர் விவகாரம், தொலைகாட்சிகளில் முக்கிய இடம் பிடித்தன. லைவ் டெலிகாஸ்ட் ஒருபுறம் ஓட, விஷயம் அறிந்து பதறிப்போய் ஓடிவந்த மாநகராட்சி அதிகாரிகள், “இது வெறும் மூணு நாள் குப்பை தான் சார்” எனச் சமாளிக்கப் பார்த்தனர். அங்கேயே தான் செல்வராஜின் விஸ்வரூபம் ஆரம்பமானது.
சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அந்த நாற்றமெடுக்கும் குப்பை மேட்டுக்குள் விறுவிறுவென நடந்தார் எம்.எல்.ஏ. “இது மூணு நாள் குப்பையா? பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? இதையெல்லாம் அள்ளுற வரைக்கும் நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன். நாளைல இருந்து ஒவ்வொரு வார்டா போய் உட்காருவேன்” என அவர் ஆவேசப்பட, அதிகாரிகள் கதி கலங்கிப் போய்விட்டார்கள். மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல், உடனடியாகத் தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு குப்பைகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டன.

வெளியில் பார்க்க இது மக்கள் நலப் போராட்டமாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள் தான் மிக முக்கியமானது. மேயர் தினேஷ்குமாருக்கும், மாவட்டச் செயலாளர் செல்வராஜுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே ஏழாம் பொருத்தம் நிலவி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மேயரின் பிடியில் இருக்கும்போது, அங்கே நிர்வாகச் சீர்கேடு நிலவுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டவே செல்வராஜ் இந்த அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியதாக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கிறார்கள்.
செல்வராஜ் தரப்போ வேறு விதமான விளக்கத்தைக் கொடுக்கிறது. “அண்ணன் எப்போதுமே அப்படித்தான். காலேஜ் ரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் போராடியபோது, ஆளுங்கட்சி என்று பார்க்காமல் அவரோடு சேர்ந்து நின்றார். பூ மார்க்கெட் விவகாரத்திலும் மக்களின் குரலாகவே ஒலித்தார். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என்கிறார்கள்.
ஆனால், இதைப் பழுத்த அரசியல்வாதிகள் ஏற்பதாக இல்லை. தேர்தல் நெருங்கும் வேளையில், மேயரின் ‘டல்லான’ இமேஜை இன்னும் டேமேஜ் செய்து, தன் கை ஓங்கியிருப்பதை அறிவாலயத்திற்கு உணர்த்தவே செல்வராஜ் இந்த அம்பு வீசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எம்.எல்.ஏ செல்வராஜை, குற்றம் குற்றம் குற்றமே தரப்பில் அணுகி பேச்சு கொடுத்தோம். அவர் நம்மிடம் “யார் எதைச் சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதுதான் என் வேலை. மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை சொல்லியும் வேலை நடக்கவில்லை, அதான் களத்தில் இறங்கினேன். இதில் யார் மீதும் எனக்குத் தனிப்பட்ட வருத்தம் கிடையாது.
மேயர்தான் இதையெல்லாம் முன்னின்று கவனித்திருக்க வேண்டும். அவர் செய்யாததை நான் செய்கிறேன். அந்த வார்டு மக்களும் என்னை ஓட்டுப் போட்டுத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்” என மிகவும் நயமாக அதேசமயம் நறுக்கென்று மேயருக்குப் பதில் தந்துள்ளார்.
தற்போது திருப்பூர் மாநகராட்சிக்குள் ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது. மேயர் ஒரு பக்கம், எம்.எல்.ஏ.,ஒரு பக்கம் என தி.மு.க இரண்டாக உள்ளது. “நிர்வாகம் சரியில்லை” என எம்.எல்.ஏ சொல்வது மறைமுகமாக மேயரின் தோல்வியைச் சுட்டிக்காட்டுவதாகவே அமைகிறது. மேயருக்கு எதிராக வீசப்பட்ட இந்த ‘குப்பை அம்பு’, இப்போது நகர் முழுக்க அரசியல் வாடையைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்குள்ளேயே அரங்கேறும் இந்த அதிகாரப் போட்டி திருப்பூரில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. மேயர் தினேஷ்குமார் இதற்கு எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறார் என்பது ஒருபுறமிருக்க, “முதல் சுற்றில் செல்வராஜ் அண்ணன் ஸ்கோர் பண்ணிட்டார்” என அவரது ஆதரவாளர்கள் நமுட்டுச் சிரிப்புடன் வலம் வருகிறார்கள். கோஷ்டிப் பூசல் எனும் குப்பையை தி.மு.க தலைமை எப்படி அகற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





