70 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்..!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், நிர்வாக நலன் கருதி காவல்துறை உயர்மட்டத்தில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள சூழலில், முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
காலி பணியிடங்களை நிரப்பவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் சுமார் 70 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தில் 30 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜிபியாக (ADGP) பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது டி.ஜி.பியாக (DGP) பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, ஏ.டி.ஜி.பி சந்தீப் மிட்டல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் பிரிவிற்கும், ஏ.டி.ஜி.பி பால நாகதேவி டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று பொருளாதாரக் குற்றப்பிரிவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் மிக முக்கிய பொறுப்பான சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி அமல்ராஜ் பொறுப்பேற்க உள்ளார். மொத்தமாக மாற்றப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள் மற்றும் 15 எஸ்.பிக்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
புத்தாண்டு தொடக்கத்திலேயே இவ்வளவு பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பது தமிழக காவல் துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான இந்த அறிவிப்பு வெளியாகி நிர்வாக ரீதியிலான மாற்றங்களை முழுமைப்படுத்தியுள்ளது.





