--- --:--:-- --

தமிழ்நாட்டில் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் தேர்தல் ஆணையம்..!

2

மிழ்நாட்டில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி, சுமார் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

 

கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றும், விவரங்கள் உறுதிப்படுத்த வேண்டியவர்களுக்கு கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி நோட்டீஸ் அனுப்பும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 12 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 619 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 987 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 63 ஆயிரத்து 373 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 479 பேருக்கும், திருச்சியில் 53 ஆயிரத்து 146 பேருக்கும், கடலூர், ஈரோடு மாவட்டங்களில் தலா 46 ஆயிரம் பேருக்கும் நோட்டீஸ் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு நோட்டீஸிலும் தனித்துவமான அறிவிப்பு எண் இடம்பெற்றிருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படுவதுடன், அவ்வறிவிப்பினை கண்காணிக்க இயலும் எனக் கூறியுள்ளது. வாக்காளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்பு, அதற்கான ஒப்புகைச் சீட்டு விவரங்கள் BLO செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், இதன் மூலம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நேரத்தை கண்காணித்து சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 

நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள், பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் நிர்ணயிக்கும் விசாரணை நாளில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon