--- --:--:-- --

தேர்தல் ஆணையம் விசாரணையில் சத்யபாமா வீடியோ!

8

மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று செவ்வாய் கிழமை காலை 7 மணியில் இருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதி மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் சத்யபாமா மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் சத்யபாமா செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவரிடம் கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்ததாக கூறும் வகையில் வைரல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த அவர், “நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது. இந்தக் காணொலியை பரப்பியது யார் என்று தெரியவில்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வீடியோக்களை பரப்புகிறார்கள். இந்த வீடியோ தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர். இந்த வீடியோ குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும். தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.” என்று தெரிவித்தார்.

 

 

 

இந்நிலையில், தாராபுரம் த.வெ.க வேட்பாளரான சத்தியபாமா, தேர்தலுக்காக ரூ.31 கோடி செலவிட்டதாகக் கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் சூழலில், அது தொடர்பாக விசாரணையில் தேர்தல் ஆணையம் இறங்கி இருக்கிறது. அந்த வீடியோ குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வீடியோ சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

 

அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பெண், விமானப் பயணக் கட்டணம், தங்குமிடம் மற்றும் பிற செலவுகளுக்காக அந்த 31 கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டதாக கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால், ‘ரூ 31 கோடி செலவு முந்தைய 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கா? அல்லது இந்த இடைத் தேர்தலுக்கா?’ என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

 

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பான செலவுகளை அதிகபட்சமாக ரூ. 40 லட்சம் வரை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நிலையில், அக்டோபர் 4 வரையில் மொத்தம் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் செலவினக் கண்காணிப்பாளர் பாஸ்கர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். அதே காலக் கெடுவுக்குள் வேட்பாளர்கள் சமர்ப்பித்த செலவினக் கணக்குகளும் தொகுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon