போலி ஆவணம் மூலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ரூ.16 கோடி சுருட்டிய மோசடி நபர் கைது!
நெடுஞ்சாலைத் துறைக்காக கையகப்படுத்தப்பட்ட நீலாங்கரை நிலத்திற்கு, ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் ₹16 கோடி இழப்பீட்டைப் பெற்ற 55 வயது நபரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலாங்கரையில் 60 ஏக்கர் குடியிருப்பு லே-அவுட் அமைக்கும் திட்டத்தை ஒரு தனியார் நிறுவனம் வைத்திருந்தது.
அந்த லே-அவுட்டில் இருந்து சுமார் 1,050 சதுர மீட்டர் (0.25 ஏக்கர்) நிலத்தை நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தவிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குதாரரான எம். சிவகணேசன் (38) என்பவர் மத்திய குற்றப்பிரிவின் (CCB) நில மோசடி விசாரணைப் பிரிவில் (LFIW) புகார் அளித்தார். நில உரிமையாளர்கள் அல்லாத ஒரு மூன்றாவது நபர், போலி ஆவணங்களைத் தயாரித்து, அரசாங்கத்திடம் இருந்து ₹16 கோடி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொண்டதை நில உரிமையாளர்கள் உணர்ந்து போலீஸை அணுகியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த நில மோசடி விசாரணைப் பிரிவினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சி.ஏ. நடராஜன் (55) என்பவரை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
நடராஜன், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது போல ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்களை உருவாக்கினார். பின்னர், அந்த ஆவணங்களை நெடுஞ்சாலைத் துறையிடம் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நடராஜன் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் நடராஜனுக்கு வேறு யாராவது உடந்தையாக உள்ளனரா என்பது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.





