--- --:--:-- --

ஜெயலலிதாவின் ரூ.13.69 கோடி வரிப்பாக்கி..!

6

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் மகன் ஜெ.தீபக் ஆகியோர், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரிப் பாக்கித் தொகையைச் செலுத்துவது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.13 கோடியே 69 லட்சம் வருமான வரிப் பாக்கித் தொகையை தவணை முறையில் செலுத்தத் தொடங்கிவிட்டதாக ஜெ.தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜெயலலிதா வைத்துச் சென்ற ரூ.36 கோடியே 56 லட்சம் வருமான வரிப் பாக்கியைச் செலுத்தக் கோரி, வருமான வரித்துறை கடந்த ஜூலை 23-ஆம் தேதி தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் முதலில் தடை விதித்தது.

 

பின்னர், இந்த வழக்கு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை தரப்பில், ரூ.36.56 கோடி நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், வரிப்பாக்கித் தொகையை ரூ.13 கோடியே 69 லட்சமாகக் குறைத்து புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.36.56 கோடி நோட்டீசை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, ரூ.13.69 கோடி கேட்டு அனுப்பப்பட்ட புதிய நோட்டீஸை எதிர்த்து ஜெ.தீபா மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

ஜெ.தீபா தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், ஜெயலலிதாவின் மற்றொரு வாரிசான ஜெ.தீபக்கையும் வழக்கில் இணைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெ.தீபக் தரப்பில், தன்னை இந்த வழக்கில் ஒரு மனுதாரராகச் சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டு, ஜெ.தீபக்கை மனுதாரராகச் சேர்த்துக் கொண்டார். ஜெ.தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.எல்.சுதர்சனம், நீதிமன்றத்தில் விளக்கத்தை அளித்தார்.

 

“ரூ. 13.69 கோடி வரிப்பாக்கித் தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என ஜெ.தீபக்கிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை ஏற்றுக்கொண்டு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான தவணைத் தொகையை ஜெ.தீபக் செலுத்திவிட்டார். மீதமுள்ள தொகையையும் அவர் செலுத்த உள்ளார்.” இந்தத் தகவலைப் பதிவு செய்த நீதிபதி, வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த பிரதான வழக்கை, வருகிற 8-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். ஜெ.தீபாவின் பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 8-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Right Menu Icon