இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது என்றும், இது மேலும் வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.





