மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்..!
சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களின் பயண வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலையில் இவ்வாண்டிற்கான மண்டல பூஜை நவம்பர் 16 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜை 2026 ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் ஏராளமான வருகையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவையை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகாராஷ்டிரா மாநிலம் ஹஜூர் சாஹிப் நந்தெத்திலிருந்து காலை 10.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07111), சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு கொல்லம் நிலையத்தை அடையும்.
மீள்பயணமாக, நவம்பர் 22 முதல் ஜனவரி 17 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 5.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07112), ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஹஜூர் சாஹிப் நந்தெத் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி வழியாகச் செல்கிறது.
இச்சிறப்பு ரயிலில் 2 ஏசி இரண்டடுக்கு படுக்கை பெட்டிகள், 8 ஏசி மூன்றடுக்கு படுக்கை பெட்டிகள், 4 ஸ்லீப்பர் பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், ஒரு சரக்கு பெட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சிறப்பு பெட்டி ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.





