56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு கவுரவம்!
56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த நிலையில், விழாவில் நடைபெறும் சர்வதேச போட்டியின் கீழ் தங்க மயில் விருதுக்கு, கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள். அந்த வகையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.






