--- --:--:-- --

தமிழகத்தின் 4 முதலமைச்சர்களுக்கு பாடல் எழுதிய பாடலாசிரியர் உயிரிழப்பு..!

2

பக்தி, காதல், கொள்கை என அனைத்து விதமான பாடல்களைத் தந்த திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவரின் நிஜப்பெயர் ‘முருகவேல் காந்தி’. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்ட இவர், ஊர் பெயரையும் முன்னால் சேர்த்து, பூவை செங்குட்டுவன் என அறியப்பட்டார்.

 

1967 முதல் திரைப்படங்களில் பாடல்களை எழுதி வந்த இவர், பெரும்பாலும் பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆரும் – கண்ணதாசனும் அரசியலில் நேர் எதிர் துருவங்களாகப் பயணித்த போது, புதிய பூமி படத்தில் கொள்கைப் பாடலை எழுத எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார் பூவை செங்குட்டுவன்.

 

முதல் பாட்டில் எம்ஜிஆரை வியக்கவைத்த பூவை செங்குட்டுவன், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், ஏடு தந்தானடி தில்லையிலே போன்ற பாடல்கள் பல காலத்தால் அழியாத புகழ்பெற்றவை ஆகும். மற்ற பாடலாசிரியர்களுக்குக் கிடைக்காத சிறப்பாக பூவை செங்குட்டுவன் தமிழகத்தின் 4 முதலமைச்சர்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். அதன்படி, அண்ணா, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு அரசியல் பாடல்களை எழுதிய பூவை செங்குட்டுவன், எம்ஜிஆருக்கு திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார்.

 

இவரின் திறமையைக் கௌரவிக்கும் விதமாக அவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. மேலும் கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, பாரதியார் விருதுகளையும் பூவை செங்குட்டுவன் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், வயது மூப்பால் காலமான பூவை செங்குட்டுவனின் உடல் பெரம்பூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவரின் மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon