ஓ.பன்னீர் செல்வத்தின் மதுரை மாநாடு ஒத்திவைப்பு..!
செப்டம்பர் 4-ம் தேதி மதுரையில் நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் அணியின் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 04-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் மதுரையில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், “தேர்தலில் அதிமுகவிற்கு மட்டுமே வாக்கு கேட்பேன் எனக்கென்று தனி இலக்கு எதுவுமில்லை. அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதே என் இலக்கு. பிரிந்து இருக்கும் அனைவரும் சேர்ந்து போட்டியிட்டால் மட்டுமே அதிமுக அட்சி அமைக்கும்.
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை பாஜக ஏற்றாலும் மக்கள்தான் அதை தீர்மானிப்பார்கள். விஜய் பேச்சு ஈர்ப்பதாக இல்லை. அரசியல் கருத்துக்கள் எதுவும் இல்லை. மாநாட்டில் விஜய் தமாசாக பேசினாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது பேச்சு ஏற்புடையதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.





