புது ஒப்பந்தம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது குறித்து பத்திரிகையாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதலமைச்சர், மேற்கொண்டுள்ள நிலையில் 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டுகளை ஈர்க்க முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒரு வார பயணமாக ஜெர்மன் இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறேன்.
செப்டம்பர் 8 ஆம் தாயகம் திரும்புகிறேன். புது ஒப்பந்தம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம். இதுவரை ரூ.10,62,752 கோடிக்கணக்கான நிதியில் 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளோம். வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு மத்திய அரசு புள்ளி விவரங்கள் சான்று. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. ஏற்கனவே 5 நாடுகள் சென்றுள்ளோம்.
பல நாடுகளுடன் 36 ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் புகைப்படம் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளேன். உங்கள் வாழ்த்து எனக்கு வேண்டும். மகிழ்ச்சி உடன் சென்று வருகிறேன். எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தை போல தான் என் பயணம் இருக்கும் என நினைக்கிறார். ஆனால் என் பயணம் திட்டமாக மாறியுள்ளது.” என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




