--- --:--:-- --

வின்ஃபாஸ்ட் மின் வாகன விற்பனை தொடக்க விழாவில் முதல்வர் பெருமிதம்

1

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன விற்பனையை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தியாவில் பேட்டரி கார் உற்பத்தியில் 40% கார்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழ்நாடு என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன்” எனத் தெரிவித்தார்.

 

தமிழ்நாடு அரசின் சார்பில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் வியட்நாமைச் சேர்ந்த முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடன் ரூ. 16 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம், சிலாநத்தம் பகுதியில் இந்த கார் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தொழிற்சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று முடிந்து, கார் உற்பத்தியும் துவங்கப்பட்டது.

 

இந்நிலையில், தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் விற்பனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார காரில் கையெழுத்திட்டு, விற்பனையைத் தொடங்கிவைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது; “அடிக்கல் நாட்டப்பட்டு, 17 மாதத்தில் கார் உற்பத்தியைத் தொடங்கி வின்ஃபாஸ்ட் நிறுவனம் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ்நாட்டின் மீது நம்பிக்கைவைத்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு முதலமைச்சராக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவில் பேட்டரி கார் உற்பத்தியில் 40% கார்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழ்நாடு என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன்.
இந்த ஆலையால் தூத்துக்குடி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தென்பகுதியும் வளர்ச்சி பெறும்.

 

இதன் மூலம், இதன்மூலம் தமிழ்நாட்டுக்கும் வியட்நாமுக்கும் இடையே வர்த்தக உறவு மேம்படும். இது தென்மாவட்டத்தின் பொன் நாள். திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இங்கு வேலை பார்க்கின்றனர். தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தில் இருக்கும் 80 முதல் 90 சதவீத நபர்கள்தான் இந்த ஆலையில் தற்போது பணியாற்றுகிறார்கள்.

 

இதன் மூலம், திராவிட மாடல் அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது.
இந்தியாவின் மின் வாகன உற்பத்தித் திட்டம் என்ற வகையில் டாடா நிறுவனத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை, ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து தூத்துக்குடி கார் உற்பத்தி நகரமாக மாறி வருகிறது.

 

பி.எம்.டபிள்யூ, ஸ்கோடா, பிஒய்டி போன்ற முன்னணி நிறுவனங்கள் தன்னுடைய மின்வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இன்னும் பல பாரம்பரிய கார் நிறுவனங்களும் மின்சார வாகனப் பாதையை தேர்ந்தெடுக்கின்றன.

 

தமிழ்நாட்டுக்கு மின்சார வாகனத்தைக் கொண்டு வரும் பயணத்தில், இவர்கள் அனைவரும் எங்களோடு இருக்கின்றனர் என்பதில் மகிழ்ச்சி. இதேநேரத்தில், வின்ஃபாஸ்ட் குழுமத்தின் மற்ற முதலீடுகளும் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என அக்குழுமத்திற்கு கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon