ஏமாற்றத்தில் எடப்பாடி! மோடியின் விசிட்டில் புறக்கணிப்பு.. குழப்பங்களால் அதிமுகவினர் தவிப்பு!
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது சகாக்களுக்கும் எதிர்பாராத ஏமாற்றத்தையே அளித்துள்ளது. சிவகங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டு, அவசர அவசரமாக திருச்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி தொடர்பான குழப்பங்களுக்கு பிரதமருடன் பேசி தீர்வு காணலாம் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்தார்.
ஆனால், அவரது அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதிமுகவின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழகத்திற்கு பிரதமர் வருகிறார் என்றால், அதிமுக வட்டாரமே அதகளப்படுகிரது; அரசியல் களத்தில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை, பிரதமரின் வருகையை பாஜகவுடனான தங்கள் உறவை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும், அதேசமயம் தங்கள் தலைமை பலவீனப்படவில்லை என்பதைக் காட்டும் ஒரு அரசியல் நகர்வாகவும் அமைக்க, எடப்பாடி பழனிசாமி விரும்பினார்.
மேலும், பிரதமரை திருச்சியில் சந்தித்து, கூட்டணி குழப்பங்கள் பற்றி பேசி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க வேண்டும்; கூட்டணி சுமூகமாகச் செயல்பட பாஜக தலைமையின் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்தார். ஆனால், திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற மோடி – எடப்பாடி சந்திப்பு, சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த, ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமைந்தது.
ஆழமான அரசியல் விவாதங்களுக்கோ, கூட்டணி எதிர்காலம் குறித்த தெளிவான நிலைப்பாட்டிற்கோ இந்தச் சந்திப்பு இடமளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, தமிழக நலன் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்ததாகக் கூறப்பட்டாலும், அதிமுகவினர் எதிர்பார்த்தது போன்று, கூட்டணி ஆட்சி குறித்த பாஜகவின் நிலைப்பாடு, அதிமுகவின் தனிப்பெரும்பான்மை நிலைப்பாடு போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜகவின் மாநிலத் தலைவர்கள் அவ்வப்போது கூறிவரும் நிலையில், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த முரண்பட்ட கருத்துகள், கூட்டணிக்குள் ஒருவித இறுக்கமான சூழலை உருவாக்கி, அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு, கூட்டணிக்குள் நிலவும் இந்தத் தெளிவற்ற தன்மைக்கு ஒரு தீர்வையோ, குறைந்தது ஒரு வெளிச்சத்தையோ கொண்டு வரும் என்று எடப்பாடி பழனிசாமி ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். ஆனால், திருச்சியில் நடந்த சந்திப்பு, வெறும் சடங்கு ரீதியான ஒன்றாகவே முடிந்தது, எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
திருச்சி விமான நிலைய வளாகத்தில் ஒரு 5 நிமிடங்களை ஒதுக்கி, பிரதமர் மோடி தன்னை சந்திப்பார் என்று பெரும் எதிர்பார்த்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் இல்லாமல் சம்பிரதாயத்திற்கு, கூட்டணி கட்சித் தலைவரான தம்மை பிரதமர் மோடி சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு போய்விட, எடப்பாடியும் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
சிவகங்கை பயணத்தை எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துவிட்டு பிரதமரை சந்திக்க வந்தார். ஆனால், மோடி அரசியல் சந்திப்புகளை தவிர்த்தது, அதிமுக மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், கூட்டணியின் எதிர்காலம் குறித்த தெளிவின்மை, அதிமுகவின் தேர்தல் வியூகங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
மேலும், மாநிலத் தலைவர்களுக்கும் மத்திய தலைமைக்கும் இடையே ஒரு ஒருங்கிணைந்த கருத்து இல்லாதது, அதிமுகவுக்குள்ளேயே ஒருவித அச்ச உணர்வையும், எதிர்காலம் குறித்த சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. பாஜகவின் மவுனம், அதிமுகவை தன்னிச்சையாக முடிவெடுக்கத் தூண்டுமா அல்லது ஒரு புதிய அரசியல் வியூகத்திற்கு வழிவகுக்குமா என்ற கேள்விகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் வலுப்பெற்றுள்ளன. இந்த பெயரளவு சந்திப்பு, அதிமுகவின் எதிர்கால அரசியலில் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம் தான் சொல்லும்.





