என் வழி விஜய் வழி! பாஜக அணிக்கு ஓ.பி.எஸ். முழுக்கு? மோடியின் புறக்கணிப்பால் கடுப்பு!
தமிழக அரசியல் களத்தில் அடுத்த சில வாரங்களில் இன்னொரு பரபரப்பு சம்பவம் அரங்கேறலாம் எனத் தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மிகத் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
அமித்ஷா, மோடியின் தொடர் புறக்கணிப்பும், தமிழக பாஜக தலைவர்களின் அலட்சியப் போக்கும் ஓ.பி.எஸ்-க்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதே இந்தத் தீர்க்கமான முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
காத்திருந்து… காத்திருந்து!
சமீபத்தில் பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வருகை தந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், கடைசிவரை ஓ.பி.எஸ்-க்கு சந்திப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஏற்கனவே, அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு, தனது அரசியல் இருப்பை பாஜகவின் தயவிலேயே தக்கவைத்துக்கொள்ள முயன்று வந்த ஓ.பி.எஸ்-க்கு, பிரதமரின் இந்தச் சந்திப்பு மறுப்பு ஒரு பெரும் பின்னடைவாகவும், பொதுவெளியில் ஏற்பட்ட அவமானமாகவும் பார்க்கப்படுகிறது.
இது பாஜக உடனான அவரது உறவில் ஏற்பட்ட விரிசலை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர்களும் ஓ.பி.எஸ்-ஐ முறையாக அணுகவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் தரப்பில் இருந்து நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஓ.பி.எஸ்-ஐ அலட்சியப்படுத்துவது, அவருக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்காமல் இருப்பது போன்ற செயல்கள், அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளன.
பாஜகவே இனி வேண்டாம்!
“தேசிய அளவில் பாஜகவின் தயவில் இருந்தாலும், மாநில அரசியலில் ஒரு மரியாதைகூட இல்லை. வெறும் பெயரளவுக்குத்தான் கூட்டணியில் இருக்கிறோமா?” என்ற ஆதங்கம் ஓ.பி.எஸ். தரப்பிலும், அவரது விசுவாசமிக்க ஆதரவாளர்களிடையேயும் வலுவாக எழுந்துள்ளது. இந்த மனக்கசப்புகளின் உச்சகட்டமாக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழுக்குப் போட்டுவிட்டு, மாற்று அரசியல் பாதையைத் தேட ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக யோசித்து வருகிறார்.
இந்தச் சூழலில்தான், ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகரும், தமிழக அரசியலின் மூத்த சிற்பிகளில் ஒருவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜகவின் தொடர் அவமானங்களை ஓ.பி.எஸ். சகித்துக் கொள்ளக் கூடாது என்று வெளிப்படையாகவே யோசனை தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், ஓபிஎஸ் தமிழகத்தில் ஒரு தனிப்பட்ட அரசியல் அடையாளத்துடன் செயல்பட வேண்டும். தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேற வேண்டும். ஓபிஎஸ்சை பாஜ புறக்கணிக்கிறது. அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜவை வளர்க்க கூடிய எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்!
மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என கும்பிடு போட்டு வெளியே வருவதே நிம்மதி. தேசிய ஜனநாயக கூட்டணியே ஆபத்தான கூட்டணி. விஜய்-ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம்” என்று தெரிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த பேட்டி, அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, இளம் வாக்காளர்களையும், புதிய அரசியல் சக்திகளையும் ஈர்த்து வரும் நிலையில், ஓ.பி.எஸ்-ன் நீண்டகால அரசியல் அனுபவம், கள யதார்த்த அறிவு மற்றும் மூத்த தலைவர் என்ற பிம்பம், த.வெ.க-விற்கு ஒரு புதிய அரசியல் பரிமாணத்தைக் கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஓபிஎஸ் வியூகம் வெற்றி பெறுமா?
அதே சமயம், விஜய்யின் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான ஆதரவும், ஓ.பி.எஸ்-க்கு ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி, தமிழக அரசியல் களத்தில் இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் பயன் அளிக்கும் ஒரு வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக உடனான உறவு முறிந்து, ஓ.பி.எஸ். விஜய்யுடன் கைகோப்பாரா என்பதுதான் தற்போது தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்த மாற்றம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தமிழக அரசியல் கூட்டணியின் சமன்பாடுகளை எப்படி மாற்றியமைக்கும் என்பதையும், புதிய அரசியல் சக்திகள் எப்படி வலுப்பெறும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





