தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்..!
தமிழ்நாட்டில் 7 இடங்களில் நேற்று வெயில் சதமடித்த நிலையில், நாளை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும், மதுரை நகர்ப்பகுதியில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும் வெயில் கொளுத்தியது.
சென்னை மீனம்பாக்கம், கடலூர், பரங்கிப்பேட்டை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டியது.இந்நிலையில், நாளை வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒரு சில இடங்களில், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் நிலவ வாய்ப்புள்ளதால் அசவுகரியம் ஏற்படலாம் என அறிவுறுத்தியுள்ளது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




