--- --:--:-- --

சென்னையில் நேற்று இரவு திடீர் கனமழை.. ஒருவர் உயிரிழப்பு..!

2

சென்னையில் நேற்று இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. கோயம்பேடு, அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஈக்காட்டுத்தாங்கலில் 15 நிமிடங்களாக கன மழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பாரிமுனை, மின்ட், ராயபுரம், வண்ணாரப்பேடடை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நடைபாதையில் உள்ள தடுப்புக்கம்பிகளில் மின்சார விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், நேற்று மழைபெய்தபோது, தடுப்புக் கம்பியை தொட்ட ஒருவர், விளம்பர பலகையிலிருந்து அதில் பரவிய மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்தார். உயிரிழந்தது சேலத்தைச் சேர்ந்த 35 வயதான பிரகாஷ் என்பது தெரியவந்த நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை புறநகர்ப் பகுதிகளான பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு, குமணன்சாவடி, போரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

 

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, தமிழ்நாட்டில் நேற்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103 புள்ளி 2 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் தூத்துக்குடியில் 101 புள்ளி 8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், வேலூரில் 101 புள்ளி 4 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கத்தில் 100 புள்ளி 9 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது. மேலும், கரூர் பரமத்தி, தஞ்சாவூர் பகுதிகளில் 100 புள்ளி 4 டிகிரி, திருச்சியில் 100 புள்ளி இரண்டு டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon