மீண்டும் பரவி வரும் கொரோனா..!
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மொத்தமாக 257 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக கேரளாவில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும், மகாராஷ்டிராவில் 56 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.அதேநேரம், தமிழ்நாட்டில் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரசின் திரிபான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில், ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்காது என்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் JN.1 என்ற வைரசின் இரண்டு திரிபுகள் பரவி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LF.7 மற்றும் NB.1.8 என்ற இரண்டு திரிபுகள் பரவி வரும் நிலையில் ஏற்கனவே செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசிகள் மூலம் இந்த வைரஸ்களை அழிப்பது சாத்தியமற்றது என பலகட்ட ஆய்வுகளின் முடிவில் தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால், புதிய வகை தொற்றுகளை அழிக்கக் கூடிய பூஸ்டர் தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




