தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடதமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நாளை முதல் 23.05.2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.05.2025 மற்றும் 25.05.2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.” என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கோடை மழை வெளுத்து வாங்கியது. அந்த வகையில், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.






