மயோனைஸுக்கு ஓராண்டு தடை – தமிழ்நாடு அரசு உத்தரவு
முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் என்பது தெரு உணவு வகைகள் மற்றும் ஷவர்மா, தந்தூரி போன்ற அசைவ உணவுகள் போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறியுள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மயோனஸ் மாசுபடுவதால், மூல முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் நோய்கள் பரவும் ஆபத்து அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இதனால் முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் லல்வீனா உத்தரவிட்டுள்ளார். இதனால் மயோனைஸை உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து ஓராண்டு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மயோனைஸ் பயன்பாட்டு தடையை உறுதிப்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு தெலங்கானாவில் மயோனைஸ் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்திலும் ஓராண்டிற்கு மயோனைஸிற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.





