மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு..!
மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய – மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி-பதில் நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் என்றும் இந்தியாவும் வலிமை பெறும் என்றும் கூறினார்.இதனை உணர்ந்து மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து முழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவின் முக்கிய பரிந்துரைகள் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அதன்பின் மத்திய, மாநில அரசுகளிடையே உறவுகளை மேம்படுத்திட சர்க்காரியா ஆணையத்தை மத்திய அரசு அமைத்ததாகவும், அந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த பிறகும் எந்தவித மாற்றமும் இன்றி ஏமாற்றமே தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்தடுத்து மாநிலப் பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை மடைமாற்றம் செய்யும் பணிகளை விரைவாகச் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவிக்காமல் மாணவர்களின் நலனை வஞ்சித்து வருவதாகவும் முதலமைச்சர் சாடினார்.
எனவே மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதி செய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.குரியன் ஜோசப் தலைமையிலான குழு மத்திய – மாநில அரசுகளின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும், அரசிலமைப்பின் விதிகளை ஆராய்ந்து குழு மறுமதிப்பீடு செய்யும் என்றும் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டவற்றை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.





