எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுமா?
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி, எச்ஐவி தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மொத்தம் 1,57,998 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,41,341 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தத் துறையின் கீழ் நிதி உதவி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றாலும், எச்ஐவி தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுக்காக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 5 கோடி வைப்பு நிதியை கொடுத்தார்.
இது தற்போது 25 கோடியாக உயர்ந்துள்ளது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுக்காக 1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது.எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.





