குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. வக்பு திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது!
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டு, கடந்தாண்டு ஆகஸ்டில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அளித்த சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, இரு அவைகளிலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால், இரு அவைகளிலும் நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்தது.இதையடுத்து, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.






