பாலியல் புகார்கள்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை..!
தமிழ்நாட்டில் சமீப காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களாலே மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான சம்பவங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இது தொடர்பாக காவல்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்களாலேயே பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி வந்துள்ளனர். காவல் துறை ரீதியான நடவடிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை சார்பாக துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பாலியல் புகாரின் பேரில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் என 23 பேரை பணி நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பாலியல் கொடுமைகள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இது தொடர்பான புகார்கள் ஆராயப்பட்டன.
தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பள்ளிக் கல்வித் துறையிடம் 46 புகார்கள் வந்து சேர்ந்தன என்றும் அதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என தற்போது 23 பேரை பணீ நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களது கல்வி தகுதியை ரத்து செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




