மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் திமுக கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிப்பதைக் கண்டித்து, சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாது என்ற மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து, தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதியக் கல்விக் கொள்கை இந்தியை திணிக்கிறது, குலக் கல்வியை ஆதரிக்கிறது, மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்தக் கட்டாயப்படுத்துகிறது.
தொழிற்கல்விக்கு வழிகாட்டுகிறது உள்ளிட்ட விமர்சனங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் உள்ள சிலர் அரசியல் செய்வதாக கூறினார்.தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் திட்டம் இல்லை என்ற மத்திய அமைச்சரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏ எழிலன், மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பு கட்டாயமாக நடைபெறும் என கூறினார்.





