ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு..!
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வானார். ஆனால், உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.53 இடங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 9 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தேர்தல் பணியில் 1,195 அலுவலர்களும், பாதுகாப்புக்காக 2,675 காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலை முன்னிட்டு, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பணியாற்றுவோருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




